

தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவித்தாவது:-
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 25,000 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளது விவசாயிகளிடையே மிகுந்த வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.
விவசாய தொழில் இயற்கை சீற்றங்கள் மற்றும் மழை வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு போராட்டத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளின் இன்னலை போக்குவதற்கு தமிழக அரசு சார்பில் 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பதிவு செய்யப்பட்டு 1975-ஆம் ஆண்டு அரசு பொது நிறுவனமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் என்பது விவசாயிகளிடம் இருந்து விளைபொருள்களை கொள்முதல் செய்து, அவற்றை சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து, பின்னர் பொது வினியோக திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இந்நிறுவனத்தின் அமுதம் சிறப்பங்காடி மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குகிறது.
கடந்த 50 வருடத்திற்கு மேலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த தானியங்களை முறையாக பராமரிக்காமல் வீணடித்து அவற்றின் தரம் குறைவாகவே மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறது. உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கே தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதுதான் காலத்தின் கொடுமை. ஆட்சி மாற்றம் எத்தனை ஏற்பட்டாலும் இந்த காட்சி மட்டும் மாறவில்லை.
விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல்மணிகள் முறையான சேமிப்பு கிடங்குகள் இல்லாமல் வீணாகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொறு விவசாய பருவத்திற்கும் எவ்வளவு டன் நெல் விளையும் என்று தெரியும். ஆனால் உற்பத்திக்கு ஏற்ப அவற்றை சேமிக்க தேவையான சேமிப்பு கிடங்குகளை அரசு உருவாக்காமல் இருப்பது ஏன்?. கடந்த காலங்களில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், அழிவுகள் உங்களுக்கு தெரியவில்லையா.?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கானதாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அரசுகள் செய்த தவறை தற்பொழுதுள்ள த.வெ.க அரசும் தொடர கூடாது. நாட்டிற்கே சோறுபோடும் விவசாயிகளின் நலனில் அக்கரையோடு செயல்பட வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் அங்கு உற்பத்தியாகும் விளைபொருட்களுக்கு ஏற்ப பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ)சார்பாக கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.