

சென்னை,
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை தமிழ்நாடு அரசு விடுவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“வாக்குத் திருட்டு மற்றும் வாக்குரிமை பறிப்புக்கு காரணமான தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது. சிறப்புத் தீவிர திருத்த முறை (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் 13 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டு, அவர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது .
சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையம் மிகப்பெரும் ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை என்.சி.ஐ. நெட் மூலம் மையப்படுத்தி, வாக்காளர் பதிவு அதிகாரிகளும் உள் நுழைய வழியின்றி அடைத்தது சட்டவிரோதமான செயலாகும்.
ஆளும் தரப்புக்கு சாதகமாகவும், குடிமக்களின் உரிமைக்கு எதிராகவும் செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி மாணவர் இளைஞர் அமைப்பினரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் இணைந்து இன்று(22.10.2026) மாலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் 24 மணி நேர போராட்டத்தை நடத்தத் துவங்கினர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறை கைது செய்து, காவலில் வைத்துள்ளது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக போராடிய இளைஞர்களையும், இளம் பெண்களையும், மாணவர்களையும் காவல்துறை கைது செய்திருப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.