

சென்னை,
கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் பொது அமைப்பு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அது அனைவரின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
இந்த நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தனித் தீர்மானம் இயற்றிய தமிழ்நாட்டரசையும் ஒருதுளி மறுப்புமின்றி ஒருமனதாக நிறைவேற்றிக்கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பரந்துபட்ட தமிழ் உலகம் பாராட்டுகிறது; எழுந்து நின்று நன்றி சொல்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் சொற்கூட்டமல்ல; அது புவியியல், வரலாறு, பீடு, பெருமிதம் அனைத்தும் கொண்ட இனத்தின் குறியீடாகும். தேசிய கீதத்தின் அளவுக்குத் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தமிழர்கள் அனைவரும் மனப்பாடம் செய்யவில்லை.
பள்ளியிலிருந்தே அது மனப்பாடப் பொருளாக மாற்றப்பட வேண்டும். மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர் முன்மொழிந்ததைப் போலவே அது சட்டமாகவும் இயற்றப்பட வேண்டும்.. தமிழ்த்தாயே...! உன்னைச் செயல் மறந்து மட்டுமல்ல செயல் புரிந்தும் வாழ்த்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.