

சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க ஜனாதிபதி மறுத்திருக்கிறார். தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்பதால் அதிர்ச்சியோ, ஏமாற்றமோ ஏற்படவில்லை. மாறாக, 7 தமிழர்களின் விடுதலைக்காக தமிழக அரசு இன்னும் கவனமாக செயல்பட வேண்டும்; தமிழர்கள் இன்னும் தீவிரமாக போராட வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்குப் பிறகாவது 7 தமிழர் விடுதலை தொடர்பான விவகாரத்தை இனிவரும் காலங்களில் எப்படி கையாள வேண்டும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் தீர்மானிக்க வேண்டும். 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் முன் இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.
முதலாவது 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கை சிறப்பாக நடத்தி, சாதகமான தீர்ப்பை பெறுவது 2-வது அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி கவர்னருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்வது ஆகும். நீதிமன்றத்தின் மூலமாக 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் அவசியம் என்பதாலும், மத்திய அரசு அதற்கு ஒப்புக்கொள்ளாது என்பதாலும் முதலாவது வாய்ப்பின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
எனவே, தமிழக அரசின் முன் உள்ள கடைசி வாய்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவின்படி கவர்னருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்துவது மட்டுமே. இதை உணர்ந்து உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி 161-வது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்; அத்தீர்மானத்தை தமிழக கவர்னருக்கு அனுப்பி அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதை தமிழக ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.