புதுக்கோட்டையில் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க இலக்கு

புதுக்கோட்டையில் 3 இடங்களில் மரகத பூஞ்சோலை அமைக்கப்படுவதாகவும், வனபரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதில் அதிகாரிகள் மாநாட்டில் பாராட்டு கிடைத்ததாகவும் வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க இலக்கு
Published on

வனத்துறை அதிகாரிகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் முதன்முதலாக வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை அதிகாரி கணேசலிங்கம் கலந்து கொண்டார். மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தின் வனத்துறையின் செயல்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டது பற்றியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுகள் குறித்தும் மாவட்ட வனத்துறை அதிகாரி கணேசலிங்கம் "தினத்தந்தி"க்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த மாநாட்டில் வனத்துறை சார்பில் நமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிவுரைகளை வழங்கினார். அந்த வகையில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் வனபரப்பபை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

50 லட்சம் மரக்கன்றுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7.86 சதவீதம் வனப்பரப்பு உள்ளது. இதனை 33 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் மாவட்ட தலைவராக கலெக்டரும், உறுப்பினர் செயலாளராக நானும் உள்ளோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டில் (2023) 50 லட்சம் மரக்கன்றுகள் நட கடந்த ஆண்டு (2022) இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த வகையில், இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 31 லட்சத்து 29 ஆயிரத்து 904 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் வனத்துறை சார்பில் 7 லட்சத்து 15 ஆயிரத்து 892 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. வனத்துறை மட்டுமில்லாமல் பிற துறைகள் சார்பிலும் மரக்கன்றுகள் நடப்படுகிறது. தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாத்தல்

இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்டமாக காலநிலை மாற்றம் இயக்கம் எனும் திட்டத்தில் மாவட்டத்தில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் உறுப்பினர் செயலாளராக நானும், பிற துறைகளை சேர்ந்தவர்களும் என 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம், சுற்றுச்சூழலை நல்ல முறையில் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டியவை, எந்த மாதிரியான செயல்திட்டங்களை செயல்படுத்தலாம் என்னென்ன காரணிகள் என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இதில் முதல் கூட்டம் கலெக்டர் தலைமையில் கடந்த 6-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கலெக்டர் முடிவு செய்து அறிவிப்பார். அந்த செயல் திட்டத்தை சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பப்படும். அதன்பின் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படும்.

மரகத பூஞ்சோலை

இந்த காலநிலை மாற்ற இயக்க திட்டத்தின் கூட்டம் அடுத்தடுத்து நடைபெறும். அதில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். எந்தெந்த துறைகள் என்ன செய்ய வேண்டும் என்பதும் முடிவு செய்யப்படும். வருகிற 18-ந் தேதி 2-வது கூட்டம் நடைபெற உள்ளது. ஈரப்பத நிலங்களை பராமரிக்கவும் மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு பறவைகள் வருகையை பாதுகாக்கும் வகையில் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் புதிய திட்டமாக 3 இடங்களில் மரகத பூஞ்சோலை அமைக்கப்பட உள்ளது. இதில் கந்தர்வகோட்டை பகுதியில் குப்பையன்பட்டி, கீரனூர் பகுதியில் வாலியம்பட்டி, திருமயம் பகுதியில் ஊனையூர் ஆகிய 3 இடங்களில் தலா 2 ஏக்கர் பரப்பளவில் தலா ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட உளளது. இதில் நிழல் தரக்ககூடிய மரங்கள், நட்சத்திர ராசி மரங்கள், பழ வகை மரங்கள் உள்ளிட்டவை நடப்படும். மேலும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சிறிய பூங்கா போன்று அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவடையும்.

சதுப்பு நில காடுகள்

மாவட்டத்தில் 42 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை பகுதி உள்ளது. மணமேல்குடி, கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும். கடற்கரை பகுதியில் சதுப்பு நிலக்காடுகள் உள்ளன. இந்த சதுப்பு நில காடுகளை பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்து.

மாநாட்டில் வனத்துறையை பொறுத்தவரை இத்திட்டங்கள் குறித்து தான் தெரிவிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்ல தரமான மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுவதாக பாராட்டப்பட்டன. மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட உத்தரவுப்படி மாவட்டத்தில் வனபரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com