தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக சென்னை இருக்கிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தடுப்பூசி போடும் பணியில் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக சென்னை இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக சென்னை இருக்கிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
Published on

சென்னை,

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாம்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழகத்துக்கு ஏற்கனவே 1.6 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 98 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக இன்று (நேற்று) காலை 1.26 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகளும், மாலை 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் என தமிழகத்துக்கு இதுவரை ஒரு கோடியே 10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

இன்று (நேற்று) மாலைக்குள் 1 கோடி தடுப்பூசி போட இலக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 21 லட்சத்து 63 ஆயிரத்து 260 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த முதல் அலையின்போது ஹாட் ஸ்பாட்டாக கருதப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில் 9 ஆயிரத்து 655 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக சென்னை மாநகராட்சியில் தடுப்பூசி போடும் பணி நடந்துவருகிறது.

கடந்த மே மாதம் கோயம்பேடு மார்க்கெட்டில் 9 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ததில் 16 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜூன் மாதத்தில் இதுவரை 3 ஆயிரத்து 643 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று சரிபாதியாக குறைந்துள்ளது. முதல்-அமைச்சரின் டெல்லி பயணித்தின்போது தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைப்பார். தற்போது தொற்றின் உச்சம் குறைந்துவருவதை கருத்தில்கொண்டே மதுபான கடைகளை திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீ கடைகள் திறப்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 33 ஆயிரத்து 618 தெருக்களில் தொற்று பாதிப்புகள் ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன் ரூ.141 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி கட்டுமான பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் தமிழகத்தில் 3 பெரிய ஆஸ்பத்திரிகளில் பெரிய கட்டிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் 7 அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளையும், 11 மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பன்னோக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என ரூ.275 கோடி மதிப்பில் அடுத்த ஆண்டில் 500 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி பணி முடிவடைய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com