மாணவனை கேலி செய்த ஆசிரியர் அதிரடி கைது

ஆலங்குளம் அருகே, பள்ளி மாணவனை கேலி செய்த ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவனை கேலி செய்த ஆசிரியர் அதிரடி கைது
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே, பள்ளி மாணவனை கேலி செய்த ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பள்ளி ஆசிரியர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் ராஜதுரைலிங்கம் (வயது 45).

இவர் அதே ஊரில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் வகுப்பறையில் பயிலும் ஒரு மாணவனை, சக மாணவர்கள் முன்னிலையில் கேலி, கிண்டல் செய்து அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் இடைவேளையின் போது அந்த மாணவனை கூப்பிட்டு ஆபாசமாக பேசியுள்ளார்.

போலீசில் புகார்

இதனால் மனமுடைந்த அந்த மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். பள்ளிக்கு செல்லாதது குறித்து மாணவனின் பெற்றோர் அவரிடம் கேட்டபோது பள்ளியில் நடந்ததை கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவனின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தீவிர விசாரணை நடத்தினார்.

கைது

விசாரணையில், ஆசிரியர் ராஜதுரைலிங்கம் மாணவனிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜதுரை லிங்கத்தை கைது செய்து ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com