காரை தீ வைத்து கொளுத்திய வாலிபர்

வேப்பூரில் ஊர் சுற்றி பார்க்க வந்த இடத்தில் ‘ஸ்டார்ட்’ ஆகாததால் ஆத்திரமடைந்த வாலிபர், காரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரை தீ வைத்து கொளுத்திய வாலிபர்
Published on

வேப்பூர்:

வேப்பூர் கூட்டுரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் பின்புறத்தில் புதிதாக மனைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த மனைப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டி.என்.23 டி.பி.0333 என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற மகேந்திரா கார் நேற்று காலை 7.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வேப்பூர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர். இதனிடையே கார் முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது.

வேலூர் வாலிபர்

இதையடுத்து அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த கார் வேலூர் மாவட்டம் வெங்கடாபுரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினர். அப்போது ஞானசேகரன், இலங்கைக்கு சுற்றுலா சென்றிருப்பதாகவும், அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருப்பதாகவும், தனது மகன் சரண்(வயது 22) காரை எடுத்து வந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் சரணின் செல்போன் எண்ணை வாங்கினர். பின்னர் போலீசார், சரணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர்.

என்னை ஏமாற்றியதால் கொளுத்தினேன்

அப்போது சரண் கூறியதாவது:-

எனது தந்தை சுற்றுலாவுக்காக இலங்கைக்கு சென்று விட்டார். அதனால் நானும், வீட்டில் இருந்த காரை எடுத்துக்கொண்டு ஊரை சுற்றிப்பார்க்க புறப்பட்டேன். வேப்பூருக்கு வந்தபோது இரவு ஆகி விட்டது. எனவே அங்குள்ள டாஸ்மாக் கடையில் 2 பீர்பாட்டில் வாங்கினேன். பின்னர் டாஸ்மாக் பின்புறமுள்ள காலி வீட்டுமனையில் காரை நிறுத்தி, பீர் குடித்துவிட்டு, காரிலேயே அயர்ந்து தூங்கிவிட்டேன். இதனை தொடர்ந்து காலையில் எழுந்து வீட்டிற்கு செல்ல முடிவு செய்தேன். அதற்காக காரை 'ஸ்டார்ட்' செய்தேன். ஆனால் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. என்னை ஏமாற்றிய காரை தீயிட்டு கொளுத்தினேன். பின்னர், நான் அங்கிருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு நடந்து வந்து பஸ் ஏறி வேலூருக்கு சென்று கொண்டு இருக்கிறேன் என்றார்.

பரபரப்பு

வேலூரில் இருந்து காரிலேயே வேப்பூர் வரை சரண் வந்திருக்கிறார். இதனால் அந்த காரில் எரிபொருள் முடிந்திருக்கலாம். அதனால் அந்த கார் 'ஸ்டார்ட்' ஆகவில்லை. இது தெரியாமல் ஆத்திரத்தில் சரண், காரை தீயிட்டு கொளுத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர் சுற்றி பார்க்க வந்த இடத்தில் 'ஸ்டார்ட்' ஆகாததால் ஆத்திரமடைந்த வாலிபர், காரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com