அமைச்சர் கே.என்.நேரு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர்

அமைச்சர் கே.என்.நேரு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
அமைச்சர் கே.என்.நேரு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர்
Published on

சென்னை காவல் கட்டுப்பாட்டு தலைமையகத்துக்கு நேற்று முன்தினம் மாலை தொலைபேசியில் பேசிய ஒரு நபர், திருச்சி தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார். உடனே இதுபற்றி திருச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் அமைச்சர் வீட்டுக்கு சென்று திருச்சி போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனால் அது வதந்தி என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அது திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த எண்ணில் பேசிய நபரை நேற்று இரவு தேடிப்பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பதும், அவருடைய 9 மாத பெண் குழந்தை உடல்நலக்குறைவால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதும் தெரியவந்தது.

அத்துடன், அந்த குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதுடன் ஒரு சிறுநீரகம் முழுமையாக செயல்படவில்லை என்பதும், மற்றொன்றும் சரியாக செயல்படாததும், இதனால் குழந்தை உயிரை காப்பாற்ற வாய்ப்பு குறைவு என்பதால் வீட்டுக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறியதும், இதனால் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஆளும்கட்சி பிரமுகர்கள் சிலரை சந்தித்து மணிகண்டன் உதவி கேட்டபோது, அவர்கள் மறுத்ததால், மனஉளைச்சலில் இருந்த மணிகண்டன் வெடிகுண்டு புரளியை கிளப்பியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையின் நலன் கருதி அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com