என்னடா இது.. த.மா.கா.வுக்கு வந்த சோதனை: எதிர்த்து நிற்கும் 5 பேர் யார் தெரியுமா?

5 தொகுதிகளிலும் எதிர்த்து நிற்க வேண்டிய வேட்பாளர்கள் யார் என்று பார்த்தால்தான் பிரமிப்பாக இருக்கிறது.
என்னடா இது.. த.மா.கா.வுக்கு வந்த சோதனை: எதிர்த்து நிற்கும் 5 பேர் யார் தெரியுமா?
Published on

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, இதே அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த த.மா.கா.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், 6 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

இந்த நிலையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகள் கேட்டார். ஆனால், அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததை காரணம் காட்டி, இந்த முறை 5 தொகுதிகளே த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, ஒட்டன்சத்திரம், கும்பகோணம், கிள்ளியூர் ஆகியவை ஆகும்.

ஆனால், த.மா.கா. வேட்பாளர்கள், அந்த 5 தொகுதிகளிலும் எதிர்த்து நிற்க வேண்டிய வேட்பாளர்கள் யார் என்று பார்த்தால்தான் பிரமிப்பாக இருக்கிறது. 3 பேர் அமைச்சர்களாக உள்ளனர். மற்ற 2 பேரும் தொகுதிகளில் செல்வாக்கு மிகுந்தவர்கள்.

தற்போது, ஈரோடு மேற்கு தொகுதியில் அமைச்சர் முத்துசாமியும், ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தியும், ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் சக்கரபாணியும், கும்பகோணத்தில் சாக்கோட்டை அன்பழகனும், கிள்ளியூரில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் ராஜேஷ்குமாரும் எம்.எல்.ஏ.வாக உள்ளனர்.

இந்த 5 பேரையும் எதிர்த்து நிற்பது என்பது த.மா.கா.வுக்கு சவாலானதாகும். அ.தி.மு.க. தேர்தல் வரலாற்றில் ஒரு முறை கூட கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்றது இல்லை. அதேபோல், கடந்த 5 தேர்தல்களிலும் ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது இல்லை. ராணிப்பேட்டையிலும் கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க.தான் வெற்றி பெற்றுள்ளது. கும்பகோணம் தொகுதியிலும் 30 ஆண்டுகளாக தி.மு.க.வே வெற்றி பெற்று வந்துள்ளது.

இப்படி, கடும் சவால் நிறைந்த தொகுதிகளே த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் யார் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டாலும் அவர்களுக்கு அக்னிபரீட்சை காத்திருக்கிறது. இது, த.மா.கா.வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், அ.தி.மு.க.வினருக்கும் கட்சி தலைமை மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தொகுதிகளில் அ.தி.மு.க.வே களம் இறங்கினால்தான், தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இப்போது, நாமே தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கிவிட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com