முன்பு இனித்தது..பின்பு கசந்தது..புது வீடுகட்ட உதவிய கள்ளக்காதலன்..இளம்பெண் பேசுவதை நிறுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்

யாரும் இல்லாத நேரத்தில் கலைபவானியும் முருகனும் கட்டிட வேலை நடந்து வந்த வீட்டில் உல்லாசமாக இருப்பார்களாம்.
முன்பு இனித்தது..பின்பு கசந்தது..புது வீடுகட்ட உதவிய கள்ளக்காதலன்..இளம்பெண் பேசுவதை நிறுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்
Published on

சென்னை,

ஆவடியை அடுத்து மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி. கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கலை பவானி (வயது 35) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இவர்கள் திருவேற்காடு அடுத்த காடுவெட்டி பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டினர். அப்போது கலைபவானி வீடு கட்டும் இடத்திற்கு சென்று வந்தபோது அப்பகுதியை சேர்ந்த அயர்ன் கடை வைத்திருந்த முருகன் (வயது 36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

வீடு கட்டுமான பணி

அவர் கட்டுமான பணியின்போது பல்வேறு வகையில் உதவியாக இருந்ததால் கலைபவானி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அவ்வபோது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். முருகனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கலைபவானி அந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு செல்வார். அப்போது முருகனும் உடன் செல்வாராம். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் கலைபவானியும் முருகனும் கட்டிட வேலை நடந்து வந்த வீட்டில் உல்லாசமாக இருப்பார்களாம்.

இதற்கிடையே வீடு கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருவேற்காடு அடுத்த காடுவெட்டி பகுதியில் உள்ள புது வீட்டிற்கு கலை பவானி குடும்பத்துடன் குடியேறினார்.

பேசுவதை குறைத்த இளம்பெண்

இதன்பின்னர் கலைபவானி, கள்ளக்காதலன் முருகனிடம் பேசுவதை குறைத்தார். மேலும் முருகனுடன் இருந்த கள்ளத்தொடர்பையும் துண்டித்து சந்திப்பதையும் தவிர்த்தார். இதுபற்றி முருகன் அடிக்கடி கலைபவானியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். வீடு கட்டும்போது உனக்கு என் வேலைகளை விட்டு உதவி செய்தேன் நீ என்னை இப்போது தவிர்க்கிறாயா? முன்பு பழகும் போது நன்றாக இனித்தது.இப்போது கசந்ததோ என கேட்டு நச்சரிக்க தொடங்கினார்.

இந்தநிலையில், இன்று காலை 10 மணி அளவில் கலைபவானியை சந்திக்க அவரது வீட்டுக்கு முருகன் வந்தார். அப்போது தொடர்பை துண்டித்தது குறித்து கேட்டதால் ஒருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கலை பவானியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கலைபவானி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்குள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.

இதயடுத்து முருகன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவர் அருகில் இருந்த பக்கத்து வீட்டு மாடிக்கு தாவி குதித்து ஓடினார். இதில் தடுமாறிய முருகன் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் முருகனில் கால் எலும்பு முறிந்தது. இதனால் அவரால் தப்பி ஓட முடியவில்லை. பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து முருகனை கைது செய்தனர். கொலையுண்ட கலைபவானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்காதல் விவகாரத்தில் வீடு புகுந்து இளம்பென் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com