

மதுரை,
சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நெல்லையில் தே.மு.தி.க. சார்பில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டேன். அப்போது, ஓட்டுக்கு பணம் வாங்கும்போது ஒரு ஓட்டுக்கு குறைந்தது ரூ.1 லட்சமாவது வாங்க வேண்டுமென வாக்காளர்களை பணத்தை வாங்க தூண்டும் வகையில் நான் பேசியதாக தாசில்தார் புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில், நெல்லை டவுன் போலீசார் எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நெல்லை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், மனுவிற்கு போலீசார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 14ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளார்.