

சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆப்பிள் ஏற்றி வருவதற்காக காஷ்மீர் சென்ற தமிழக லாரி டிரைவர்கள் 900-க்கும் மேற்பட்டோர் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி, கடந்த 13 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். சுற்றுலா வாகனங்கள் செல்வதற்காக வெளிமாநில லாரிகள் வெளியேற காஷ்மீர் நிர்வாகம் அனுமதி மறுத்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழக லாரி டிரைவர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். கடுமையான பனிப்பொழிவில் சிக்கியுள்ள அவர்களில் பலருக்கு மோசமான உடல்நலக்குறைவும் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவம் எடுத்துக் கொள்வதற்கான வசதிகளும் இல்லாததால் அவர்களின் அவதி அதிகரித்துள்ளது.
13 நாட்களுக்கும் மேலாக லாரிகளை முடக்கி வைப்பது நியாயமல்ல. லாரி ஓட்டுனர்களில் பலர் வயது முதிர்ந்தவர்களாகவும், உடல் நலக்குறைவு கொண்டவர்களாகவும் இருக்கக்கூடும். அவர்களால் எத்தனை நாட்களுக்குத் தான் பனிப்பொழிவை தாங்கிக் கொண்டு இருக்க முடியும்? என்பதை காஷ்மீர் அரசு நிர்வாகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எனவே அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் லாரிகள் வெளியேற அனுமதிக்க வேண்டும். அதுவரை லாரி ஓட்டுனர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை காஷ்மீர் அரசு வழங்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசிடமும், காஷ்மீர் கவர்னரிடமும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.