‘கருத்து சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான நடவடிக்கைகளை த.வெ.க. அரசு கைவிட வேண்டும்’ - முகம்மது முபாரக்

அச்சப்படுபவர்களே கருத்து சுதந்திரத்தை நசுக்க முயல்வார்கள் என முகம்மது முபாரக் தெரிவித்துள்ளார்.
‘கருத்து சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான நடவடிக்கைகளை த.வெ.க. அரசு கைவிட வேண்டும்’ - முகம்மது முபாரக்
Published on

சென்னை,

மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் தமிழக அரசின் சுற்றறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என எஸ்டி.பி.ஐ. கட்சியின் தலைவர் முகம்மது முபாரக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஜனநாயகப் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி ஆணையரால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் கடும் அதிர்ச்சியை அளிக்கின்றன. மாணவர்களின் உரிமைகளைப் பறிக்கும் இத்தகைய நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுப்பதற்காகக் காவல்துறை, கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்ற அணுகுமுறை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கி இருக்கும் ஜனநாயக உரிமைகளுக்கே எதிரானதாகும்.

மாணவர்கள் பாடப் புத்தகங்களை மட்டும் படிக்கும் எந்திரங்கள் அல்ல; சமூகப் பிரச்சினைகளுக்காகவும் அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அமைதியான வழியில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும், அறப்போராட்டங்களில் ஈடுபடவும் மாணவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதிகார அழுத்தங்கள் மூலம் மாணவர்களின் குரலை ஒடுக்க நினைப்பது தெளிவான அடக்குமுறையாகும்.

மாற்றுக் கருத்துகளையும் கேள்விகளையும் கண்டு அச்சப்படுபவர்களே கருத்துச் சுதந்திரத்தை நசுக்க முயல்வார்கள். அதிகாரத்தைக் கொண்டு மாணவர்களின் கேள்விகளைத் தற்காலிகமாகத் தடுக்க முடியுமே தவிர, சமூகப் பொறுப்புள்ள ஒரு தலைமுறை உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.

எனவே, கருத்து சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான இத்தகைய நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மாணவர்களை அச்சுறுத்தாமல், அவர்களின் ஜனநாயக உரிமைகளை மதித்து நடப்பதே ஒரு சிறந்த அரசிற்கு அழகாகும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com