சமூகநீதியைச் சிதைக்கும் திட்டத்தை தவெக அரசு கைவிட வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

முஸ்லீம் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது எவ்வகையில் நியாயம்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5%- இல் இருந்து 5%- ஆக உயர்த்த வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், அதனை பரிசீலிக்கும் முன் தவெக அரசு முதலில் முஸ்லீம் இட ஒதுக்கீடு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு

தமிழகத்தில் ஏற்கனவே முஸ்லீம்களுக்கு இருக்கும் 3.5% இட ஒதுக்கீட்டால், பிற்படுத்தப்பட்ட இந்து மக்கள் சிலர் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கும் நிலையில், மேலும் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது, பிற்படுத்தப்பட்ட இந்து மக்களின் பிரதிநிதித்துவத்தை மொத்தமாகக் குறைத்துவிடும். மதம் சார்ந்து எந்த ஒரு ஒதுக்கீடும் இருக்கக் கூடாது என அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள நிலையில், முஸ்லீம் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது எவ்வகையில் நியாயம்?

முற்றிலும் தவறானது..

எனவே, முஸ்லீம் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் கோரிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்துவதே முற்றிலும் தவறானது என்பதை தவெக அரசு உணரவேண்டும்! பிளவுவாத அரசியலுக்கு அடிபணிந்து, தமிழக மக்களின் சமூகநீதியைச் சிதைக்கும் ஏதேனும் திட்டமிருந்தால் தவெக அரசு உடனடியாகக் கைவிடுவதோடு, அதனை பகிரங்கமான செய்தியாக வெளியிட்டு தெளிவுபடுத்த வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com