

சென்னை,
தவெக ஆட்சிக்கு ஆதரவு தந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் செப்.9-ம் தேதி நடைபெறுகிறது.
தவெக ஆட்சி அமைத்த நாளில் இருந்தே கூட்டணியை வலுவாக உருவாக்க திட்டமிட்டு வருகிறது. முதலில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், பின்னர் விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. இதன்பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரடியாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார்.
இதன்பின் ஜூலை 1ஆம் தேதி தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவு கூட்டம் கோவளத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், அமைச்சர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல் விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் சார்பாக காதர் மொய்தீன், மதிமுக சார்பாக வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு முந்தைய நாள் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசித்தனர். இந்த நிலையில் தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தை கூட்ட தவெக ஆயத்தமாகி வருகிறது.
செப்டம்பர் 8ஆம் தேதியுடன் சட்டசபைக் கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 9ஆம் தேதி தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதற்காக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்று அழைப்பு விடுத்தனர்.
அங்கிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சென்று மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்புக்கு பின் நேராக வைகோ வீட்டிற்கு சென்று அமைச்சர்கள் அழைப்பு விடுத்தனர்.
நாளை விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், இடைத்தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.