

சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதில் 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 885 வாக்குகள் ஈ.வி.எம். எந்திரம் மூலமாகவும், தபால் வாக்குகளாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 384-ம் பதிவாகி இருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஒரு கோடி வாக்குகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இன்று மாலை 3 மணி நிலவரப்படி, த.வெ.க. 1 கோடியே 9 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. இது 22.54 சதவீதமாகும். தொடர்ந்து, தி.மு.க. 71.97 லட்சம் வாக்குகளுடன் 2-வது இடத்திலும், அ.தி.மு.க. 66.53 லட்சம் வாக்குகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.