

புதுச்சேரி,
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ளது. இந்நிலையில், ஜூன் 15-ந்தேதியுடன் புதுச்சேரி அரசின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்ட தேர்தலாக நடத்தப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை புதுச்சேரியில் உள்ள ஒசுடு தொகுதியின் வேட்பாளர் உடன் ரோடு ஷோவில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
புதுச்சேரி, ஒசுடு தொகுதியில் இன்று நமது என்.டி.ஏ வேட்பாளர் தீப்பைந்தன் அவர்களுடன் இணைந்து பிரசாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த சாலை பேரணிக்கு கிடைத்த வரவேற்பு, என்.டி.ஏ-வின் தொலைநோக்கு பார்வை மற்றும் தலைமை மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என கூறினார்.
மேலும் காங்கிரஸின் வெற்று வாக்குறுதிகளுக்கும், என்.டி.ஏ-வின் நிரூபிக்கப்பட்ட ஆட்சிக்கும் உள்ள வேறுபாட்டை புதுச்சேரி மக்கள் அறிவார்கள். நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் தலைமையில், இரட்டை எஞ்சின் என்.டி.ஏ அரசு வளர்ச்சி, நலன் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கியுள்ளது மேலும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக ஒசுடு தொகுதி என்.டி.ஏ-வுடன் உறுதியாக நிற்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.