பத்மநாபபுரம் கோட்டை சுவரின் மேல்பாகம் இடிந்து விழுந்தது

தக்கலை அருக பத்மநாபபுரம் கோட்டை சுவரின் மேல்பாகம் இடிந்து விழுந்தது. சுவரை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்மநாபபுரம் கோட்டை சுவரின் மேல்பாகம் இடிந்து விழுந்தது
Published on

தக்கலை, 

தக்கலை அருக உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஆட்சி புரிந்த திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் 1744-ம் ஆண்டு தலைநகரை சுற்றிலும் மண்கோட்டையாக இருந்த கோட்டை சுவர் கல்கோட்டையாக மாற்றப்பட்டது. தற்போது பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் கோட்டை சுவர் தமிழக அரசின்கீழ் உள்ளது. இந்த கோட்டை சுவரில் புளியமரம், ஆலமரம், அரசமரம், புங்கு, மஞ்சணத்தி போன்றவை வளர்ந்து காணப்படுகின்றன. இந்த மரங்களின் வேர்கள் சுவரின் உள்ளே ஊடுருவி சுவரை பெயர்த்து வருகிறது.

கடந்த 2021 -ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆர்.சி. தெரு பக்கமுள்ள கோட்டை சுவரில் 200 அடி தூரம் உடைந்து விழுந்தது. இதனையடுத்து கோட்டை சுவரை புனரமைக்க தமிழக அரசு முனைப்பு காட்டியது. தமிழக அமைச்சர்கள் மனோதங்கராஜ், எ.வ.வேலு ஆகியோர் அதிகாரிகளோடு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை உடைந்த பாகம் சரிசெய்யப்படவில்லை. தற்போது கோட்டையின் சில பாகங்கள் அவ்வப்போது உடைந்து விழுந்த படி உள்ளது.

உடைந்து விழுந்தது

இந்தநிலையில் நேற்று காலையில் தக்கலை-குலசேகரம் சாலையில் இலுப்பக்கோணம் பகுதியில் கோட்டையின் மேல்பகுதி உடைந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்களோ, பொதுமக்களோ செல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதில் வளர்ந்து நிற்கும் மரத்தின் வேர்களால்தான் சுவர் இடிந்து விழுந்தது தெரிய வருகிறது. இதுபோல் பல இடங்களில் சுவர் உடைந்து விழும் அபாயம் உள்ளது. ஆகவே உடைந்த பாகத்தை சீரமைப்பதோடு மேலும் சுவர் உடையாமல் பழமைமாறாமல் பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com