விக்டோரியா அரங்கத்தை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி

அரங்கத்தை பார்வையிட முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையின் அடையாளமாகத் திகழும் விக்டோரியா பொது அரங்கம் 1887-ம் ஆண்டு ராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவு கூர்ந்து கட்டப்பட்டது. இந்த அரங்கம் சென்னையின் சமூக, பண்பாட்டு வரலாற்றின் முக்கிய சாட்சியாக விளங்குகிறது. முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த அரங்கம், தற்போது அருங்காட்சியகமும், கலை மேடையும் கொண்ட ஒரு பொது பண்பாட்டு தளமாக மாற்றப்பட்டுள்ளது.
ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை கடந்த 23-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், விக்டோரியா அரங்கத்தை பொதுமக்கள் இன்று முதல் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அரங்கத்தை பார்வையிட முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான chennaicorporation.gov.in/gcc/ மூலம் VICTORIA PUBLIC HALL என்பதை தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஒன்றரை மணி நேர இடைவெளிக்கும் அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, விக்டோரியா பொது அரங்கின் கலை அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.
இதற்கும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். கலை மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இங்கு அனுமதி வழங்கப்படும் என்றும், பதிவு செய்த பிறகு, நிகழ்ச்சியின் நோக்கத்தைப் பொறுத்து அனுமதி உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






