வருகிற 7-ந்தேதி முதல் ஐகோர்ட்டில் காணொலி காட்சி விசாரணை முறை நிறுத்தம்

ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் விசாரணை முறை வருகிற 7-ந்தேதி முதல் நிறுத்தப்பட உள்ளதாக தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
வருகிற 7-ந்தேதி முதல் ஐகோர்ட்டில் காணொலி காட்சி விசாரணை முறை நிறுத்தம்
Published on

சென்னை,

கொரோனா தொற்று பரவலை அடுத்து, சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் காணொலி காட்சி வாயிலாக மட்டும் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. பின்னர், காணொலி மற்றும் நேரடி முறையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் எல்லாம் வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டன.

கேட்கவில்லை

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வருகிற 7-ந்தேதி முதல் காணொலி காட்சி வாயிலாக வழக்குகளை விசாரிக்கும் முறையை நிறுத்த உள்ளதாக தலைமை நீதிபதி கூறினார்.

தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வக்கீல் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி வாதிட்டார். அவரது வாதம் தனக்கு கேட்கவில்லை என்று அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் கூறினார்.

நிறுத்தம்

அதற்கு தலைமை நீதிபதி, காணொலி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்குகளின் விசாரணை நடைபெறும்போது, இணையதள தொடர்பு உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்வதாக சக நீதிபதிகள் கூறுகின்றனர். அதனால் வருகிற 7-ந்தேதி முதல் காணொலி காட்சி விசாரணை முறையை நிறுத்த உள்ளோம். காணொலி விசாரணை தேவைப்படும் மூத்த வக்கீல்கள் மட்டும் அந்த முறையில் வாதிட அனுமதிக்கப்படுவர்' என்று கூறினார்.

எனவே, 2 ஆண்டுகளாக அமலில் இருந்த காணொலி விசாரணை முறை, அடுத்த வாரம் முதல் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com