சென்னை மாநகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களம் இறங்கியது

சென்னை மாநகராட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் களம் இறங்கி உள்ளது. ரசிகர்களுடன் வந்து வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களம் இறங்கியது
Published on

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் போட்டியிட்டு, கணிசமான இடங்களை கைப்பற்றியது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனது மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிடுவதற்கு விஜய் அனுமதி வழங்கினார்.

ஆனால் மற்ற அரசியல் கட்சிகள் போன்று விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் பட்டியலை பொது வெளியில் வெளியிடாமல், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டும் தனியாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

ரசிகர்கள் பட்டாளம்

சென்னை கே.கே.நகரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஸ்டார் குணசேகரனின் மனைவி ஜி.அறிவுச்செல்வி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 136-வது வார்டில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர், தனது கணவர் மற்றும் விஜய் ரசிகர்களுடன் வந்து நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அப்போது அறிவுச்செல்வி, நிருபர்களிடம் கூறுகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் குடியிருப்பவர், நடிகர் விஜய். எனவே மக்கள் எங்களுக்கு அமோகமாக ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே எங்களுடைய தலையாய கடமை ஆகும். என்றார்.

தேர்தல் களம் விறுவிறுப்பு

இதே போன்று விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, ச.ம.க. என பலமுனை போட்டி நிலவி வரும் வேளையில், நடிகர் விஜயின் மக்கள் இயக்கமும் போட்டியில் குதித்துள்ளதால் சென்னை மாநகராட்சி தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com