தாசில்தாரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

சுடுகாட்டுக்கு உரிய வழி கேட்டு ஊத்துக்கோட்டை தாசில்தாரை வேளகாபுரம் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாசில்தாரை முற்றுகையிட்ட கிராம மக்கள்
Published on

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், வேளகாபுரம் கிராமத்தில் பொது சுடுகாடு ஒன்று இருந்தது. அந்த சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் கோவில் ஒன்று இருப்பதால் அந்த சுடுகாட்டை மக்கள் பயன்படுத்தவில்லை.

இந்நிலையில், தனிநபர் ஒருவர் சுமார் 20 சென்ட் நிலத்தை சுடுகாடுக்கு தானமாக வழங்கினார். இந்த புதிய சுடுகாட்டிற்கு அரசு புறம்போக்கு நிலத்தின் வழியாகதான் செல்ல வேண்டும். ஆனால், இந்த புறம்போக்கு நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு வேளகாபுரம் கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனி (வயது 68) என்பவர் மரணம் அடைந்தார். இவரது மகன் அமெரிக்காவில் இருந்து வந்து தனது தந்தை பழனியின் உடலை அடக்கம் செய்ய உரிய ஏற்பாடுகளை நேற்று செய்தார்.

அப்பொழுது புறம்போக்கு நிலம் வழியாக சுடுகாட்டுக்கு செல்லக்கூடாது என அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவரின் உறவினர் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியதாக ஊத்துக்கோட்டை தாசில்தார் வசந்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தாசில்தார் வசந்தியை கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடத்தில் வைத்து முற்றுகையிட்டு தங்களுக்கு சுடுகாட்டுக்கு செல்ல உரிய வழி வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்தில் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்க உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி கூறினர்.

இதனை ஏற்று அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த பிரச்சினையால் வேளகாபுரம் கிராமத்தில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com