

பூந்தமல்லி,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, தொடர் கனமழையால் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியில் இருந்து கடந்த மாதம் 7-ந்தேதி 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நீர் திறப்பும் படிப்படியாக உயர்த்தப்பட்டது. நேற்றுடன் 23-வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 24 அடி. நேற்று காலை ஏரியின் நீர்மட்டம் 22.15 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 3,159 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 4,770 கன அடியாகவும், உபரிநீர் வெளியேற்றம் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது.
இதற்கிடையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து கடந்த 21-ந் தேதி முதல் இணைப்பு கால்வாயில் வினாடிக்கு 176 கன அடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது.
22 அடியை எட்டியது
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் இந்த மாதத்தில் மட்டும் தொடர்ந்து 2-வது முறையாக 22 அடியை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்த கொள்ளளவும் 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மேல் சென்றுள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி, நீர் மட்டம் 21 அடியை எட்டியதும் ஏரிக்கு வரும் உபரிநீர் அப்படியே திறந்து விடப்படும்.
ஆனால் தற்போது தொடர் மழை, ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் ஆகியவற்றால் அடையாறு ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆற்றில் கூடுதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரம் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை தாண்டினாலும் சீரான அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் தொடர்ந்து மழை பெய்தாலோ, ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தாலோ உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.