முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் சட்டசபையில் கவர்னர் பேச்சு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உறுதிபடக் கூறினார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் சட்டசபையில் கவர்னர் பேச்சு
Published on

சென்னை,

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உறுதிபடக் கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் உள்ள மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக, விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரிக்க, அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள மத்திய நீர் ஆணையத்தின் நடவடிக்கையை இந்த அரசு கடுமையாக எதிர்க்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பகிர்வில், கீழ் படுகை மாநிலங்களுக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய நதிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் வகையில் மேல் படுகையில் உள்ள மாநிலம் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற காவிரி நடுவர் மன்ற ஆணையின் மீதான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினை வெளிப்படையாக மீறுவதாக இந்தச் செயல் அமைகிறது.

கர்நாடக அரசு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை கண்டனம் செய்வதுடன், கர்நாடக அரசுக்கு அளித்த அனுமதியை மத்திய நீர் ஆணையம் உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசின் சம்மதமின்றி காவிரி நடுவர் மன்றத்தின் உறுதி ஆணையையும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையும் மீறி கர்நாடகாவில் மேகதாதுவிலோ, காவிரி வடிநிலப் பகுதியில் வேறெந்த இடத்திலோ, எந்த ஒரு பணியையும் கர்நாடக அரசோ அல்லது அதன் அமைப்புகளோ மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று இச்சட்டமன்றப் பேரவை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்டுவதற்கான கேரளா அரசின் முயற்சியை இந்த அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதோடு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்துவதற்கான உறுதியான நடவடிக்கையை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

மாநிலங்களுக்கு இடையேயான அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளிலும், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பரஸ்பர நம்பிக்கையுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொண்டு, நீர்ப் பகிர்வு உரிமைகளை பாரபட்சமின்றிப் பகிர்ந்து கொள்ளும் வகையில் செயல்பட்டால் மட்டுமே இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண முடியும் என்று இந்த அரசு உறுதியாக நம்பினாலும், மாநிலத்தின் நீர்ப் பகிர்வு உரிமைகளை நிலைநிறுத்த, மீண்டும் மீண்டும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டு வருகிறது.

எனவே, மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் அடியொற்றி, நமது முதல்அமைச்சரும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுக்க உறுதி பூண்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com