தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரங்கள் கழன்று விபத்து - டி.டி.வி. தினகரன் கண்டனம்


தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரங்கள் கழன்று விபத்து - டி.டி.வி. தினகரன் கண்டனம்
x

கோப்புப்படம் 

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை

அரசுப் பேருந்துகளில் பயணிக்கவே பொதுமக்கள் அச்சப்படும் சூழலை உருவாக்கிய தி.மு.க. அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை - குற்றாலம் இடையே இயக்கப்பட்ட அரசுப் பேருந்து தென்காசி கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது தீடிரென பின்பக்க சக்கரங்கள் கழன்று விபத்துக்குள்ளாகியதில் 3 மாணவர்கள் படுகாயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசுப் பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கும்போதே அச்சு முறிந்து நடுவழியில் நிற்பதையும், பிரேக் பிடிக்காமல் அடிக்கடி சாலைத் தடுப்புகளில் மோதி விபத்திற்குள்ளாவதையும் பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் கண்டுகொள்ளாத போக்குவரத்துத்துறையால் பேருந்தின் பின்பக்க இரண்டு சக்கரங்களும் தனியாக கழன்று ஓடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஓட்டை ஏற்பட்டு நிகழ்ந்த விபத்தில் தொடங்கி, திருச்சியில் நடத்துனரின் இருக்கை கழன்று நடைபெற்ற விபத்து வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், அப்பேருந்துகளை முறையாக பராமரிக்கவோ, புதிய பேருந்துகளை வாங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் காலாவதியான பேருந்துகளும், தகுதியற்ற பேருந்துகளுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகள் வாங்கவும், பழைய பேருந்துகளை பராமரிக்கவும் ஒதுக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியை அனைவரின் மத்தியிலும் எழுப்புகிறது.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப்பேருந்துகளை முறையாக பராமரிப்பதோடு, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் தொகையை முழுமையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story