

சென்னை,
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் 4-ந் தேதி வெளிவந்தது. 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் (தி.மு.க., அ.தி.மு.க.) ஆட்சிக்கு முடிவு கட்டி, தேர்தலுக்கு புது வரவான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, மக்கள் மத்தியில் விஜய் பேசிய நேரத்தில், "இந்த தேர்தலில் 2 கட்சிகளுக்கு இடையே மட்டும்தான் போட்டியே. ஒன்னு.. டி.வி.கே. (த.வெ.க.), இன்னொன்னு.. டி.எம்.கே. (தி.மு.க.)" என்று கூறிவந்தார். அப்போதுகூட, தேர்தல் முடிவும் அவ்வாறாகத்தான் இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. கடைசியில் அவர் சொன்னதுதான் நடந்திருக்கிறது. த.வெ.க. ஆட்சி அரியணை ஏறி இருக்கிறது. தி.மு.க. எதிர்க்கட்சிகள் வரிசைக்கு தலைமை தாங்குகிறது.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு விஜய்க்கு நெருக்கடி அதிகரித்தது. ஒரு பக்கம் பிரசாரத்திற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்த நிலையில், மற்றொரு பக்கம் சி.பி.ஐ. விசாரணையும் சென்று கொண்டிருந்தது. இதுபோன்ற தொடர் நெருக்கடிகளால், விஜய்யால் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. குறிப்பாக, தென்மாவட்டங்களுக்கு அவர் செல்லாததால், அங்கு த.வெ.க.வுக்கு வெற்றி பெரிய அளவில் கிடைக்கவில்லை. அதனால், கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டுவிட்டது.
இப்போது, ஒரு மாத கால ஆட்சியை த.வெ.க. அரசு கடந்திருக்கிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள், மின் தடை பிரச்சினை போன்றவை புதிய அரசுக்கு சவாலாக நிற்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினைகளை கையில் எடுத்து அரசியல் களமாடி வருகின்றன.
இதற்கு மத்தியில், தமிழக அரசியல் களத்தில் கட்சித் தாவும் நிகழ்வுகளும் சூறாவளியாக சுழன்று கொண்டிருக்கிறது. எப்போதுமே, பழுத்த பழங்கள் நிறைந்த மரங்களை நோக்கித்தான் பறவைகள் கூட்டம் வரும் என்பதைப்போல, இப்போது ஆட்சியில் இருக்கும் த.வெ.க.வை நோக்கித்தான் மாற்றுக்கட்சியினர் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் 3-வது இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கிறது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மீதான அதிருப்தியில் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியேறி த.வெ.க.வில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தி.மு.க. பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சி என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக த.வெ.க. கூறிக்கொண்டிருக்கும் நிலையில், மாற்று கட்சியினர் எந்த நிலைப்பாட்டில் வந்து அக்கட்சியில் இணைகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அடுத்து, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும் சந்திக்க இருக்கிறது. இடை இடையே மாநிலங்களவையில் காலியாகும் எம்.பி. பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கின்றது.
எனவே, பதவிகளை எதிர்பார்த்தே அ.தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் த.வெ.க.வில் வந்து இணைகிறார்கள் என்று கூறப்படுகிறது. இது த.வெ.க. தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர் மன்ற காலத்தில் இருந்தே நாம் தொடர்ந்து பயணித்து வரும் நிலையில், தற்போது கட்சியில் இணைந்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டால் எப்படி? என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
இன்றைக்கு பதவிகளை எதிர்பார்த்து த.வெ.க.வில் இணைந்தவர்களுக்கு, அது கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மாற்று கட்சிகளை நோக்கி பயணிக்க தொடங்கிவிடுவார்கள் என்றும் த.வெ.க.வினர் கூறுகிறார்கள். இதனால், கட்சியில் புதிதாக இணைந்தவர்களால், பிரச்சினைகள் ஏற்படுமே தவிர, கட்சியின் வளர்ச்சிக்கான ஏணியாக இருக்கமாட்டார்கள் என்றே த.வெ.க.வினர் கருதுகின்றனர்.
எனவே, மாற்று கட்சியினரை இணைக்கும்போது கவனம் தேவை என்ற கருத்தையே த.வெக. தலைமைக்கு அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். இல்லை என்றால், அதுவே புதிய தலைவலியை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.