கணவனை விட்டுவிடு என கள்ளக்காதலியிடம் கெஞ்சிய மனைவி... அடுத்து நடந்த பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கணவனே கண்கண்ட தெய்வம் என்று நினைத்து கரம்பிடித்து வாழும் பெண்ணை, கண்கலங்க வைத்துவிட்டு செல்லும் சிலநபர்களுக்கு இதயம் கல்லாகி விட்டது என்றுதானே அர்த்தம். இருந்தாலும் பெண்களில் இன்னும் சிலர் கல்லானாலும்....கணவர் என்கிற மந்திரச்சொல்லுக்கு கட்டுப்பட்டுத்தான் வாழ்கின்றனர்.
அந்த வகையில், கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவர், பிரபல கார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தனக்கொரு குடும்பம், குழந்தைகள் என்பதுடன் வாழ்க்கையை வசந்தமாக்கி கொள்ளாமல், வேறொரு பெண்ணுடன் பழகினார்.
அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரின் பழக்கம் ஊழியரின் மனைவிக்கு தெரியவந்தது. இதையடுத்து மனைவி, தனது மனக்குமுறலை கணவனிடம் கொட்டி தீர்த்தும் பயனில்லாமல் போனது. முடிவில் கணவனின் கள்ளக்காதலியான அந்த பெண்ணை செல்போனில் அழைத்து உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்றாள்.
அந்த பெண்ணும், கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு வாருங்கள் என்று கூறி உள்ளார். அதன்படி இருவரும் பஸ் நிலையத்தில் சந்தித்தனர். அப்போது அந்த ஊழியரின் மனைவி, தன் கணவனை வசியப்படுத்திய கள்ளக்காதலியிடம் பேசும்போது, "நான்தான் அவரது மனைவி. எங்களுக்கு குழந்தைகள் உள்ளனர். எங்கள் குடும்பத்தினருக்கு தெரிந்தால் அவமானமாக போய்விடும். அதனால் எனது கணவனைவிட்டு விலகி சென்று விடுங்கள்" என்று கெஞ்சினார். அவரது கெஞ்சலை அப்போதைக்கு கேட்டதுபோல் கள்ளக்காதலி சென்றாள்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியே சென்ற கணவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தாள் பலனில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அந்த பெண்ணின் அலைபேசியும் சத்தமில்லாமல் அடங்கி போய் இருந்தது. இதனால் தனது கணவர் கள்ளக்காதலியுடன் சென்று இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






