ஆதிவாசி மக்களின் வீடுகளை சூறையாடிய காட்டுயானை

கூடலூர் அருகே ஆதிவாசி மக்களின் வீடுகளை காட்டுயானை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இடிபாடுகளில் சிக்கி குழந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆதிவாசி மக்களின் வீடுகளை சூறையாடிய காட்டுயானை
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாராவில் கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவில் ஒரு காட்டுயானை நுழைந்தது. தொடர்ந்து வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் அச்சமடைந்தனர்.

தொடர்ந்து சிவசங்கரன், மாதவன், சாமி ஆகியோரது வீடுகளை காட்டுயானை உடைத்து சூறையாடியது. இதனால் வீட்டுக்குள் இருந்த ஆதிவாசி மக்கள் பயத்தில் கூச்சலிட்டனர். ஆனாலும் காட்டுயானை வீடுகளை தொடர்ந்து சேதப்படுத்தியது.

2 பேர் படுகாயம்

அப்போது வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததில், சிவசங்கரன்(வயது 49), அவரது 8 மாத பேரக்குழந்தை வினுது ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னர் ஆதிவாசி மக்கள் திரண்டு வந்து காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டு யானை அங்கிருந்து செல்லாமல், அருகில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, பாக்கு உள்ளிட்ட மரங்களை தின்று அட்டகாசம் செய்தது.

இதனால் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாமல் ஆதிவாசி மக்கள் தவித்தனர். அதன்பின்னர் நேற்று காலை 6 மணிக்கு காட்டுயானை அங்கிருந்து சென்றது. தொடர்ந்து கொடுத்த தகவலின்பேரில் ஆம்புலன்ஸ் வந்தது. இதையடுத்து படுகாயம் அடைந்த சிவசங்கரன், குழந்தை வினுது ஆகியோர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்து கிடந்த யானை

இதற்கிடையே நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் உடல் அழுகிய நிலையில் குட்டியானை இறந்து கிடந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com