

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக இருந்த பதவிகளுக்கு கடந்த 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அதன்படி மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டு பதவிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதேபோல் தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவராக செல்லமணி, தொண்டைமான் ஊரணி ஊராட்சி செயலாளராக தாமரை செல்வி, வெட்டுக்காடு ஊராட்சி தலைவராக ராஜாகண்ணு, மேலப்பட்டு ஊராட்சி தலைவராக அயூப்கான், நெடுங்குடி ஊராட்சி தலைவராக வெள்ளைச்சாமி, செங்கீரை 5-வது வார்டு உறுப்பினராக சாத்தையா ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். இதேபோல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 21 வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.