விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டு கையை கடித்த பெண்

திருமணம் நின்ற விரக்தியில் காதலன் வீட்டில் தகராறு செய்த பெண்ணை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டுவின் கையை கடித்து, அவரது சட்டையை கிழித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டு கையை கடித்த பெண்
Published on

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் எஸ்.பி.கோவில் தெருவில் வசித்து வருபவர் ரேவேந்திரன் (வயது 37). தனியார் வங்கி அதிகாரியான இவரும், புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கமாள் தெருவில் வசித்துவரும் செல்வி (32) என்ற பெண்ணும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி இவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் மணமகன் வீட்டாரிடம் திருமணத்துக்கு முன்பே மணமகள் செல்வி, தனக்கு 5 பவுன் நகை, மொபட் மற்றும் ரூ.1 லட்சம் கேட்டு தொந்தரவு செய்ததாக தரிகிறது.

இதனால் இவர்களின் திருமண முடிவு ரத்து செய்யப்பட்டது. திருமணம் நின்றுபோனதால் விரக்தியடைந்த செல்வி, அவ்வப்போது தனது காதலன் ரேவேந்திரன் வீட்டுக்கு சென்று தகராறு செய்து வந்தார்.

போலீஸ் ஏட்டு

நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் காதலன் வீட்டுக்கு செல்வி சென்றார். அங்கு காதலன் ரேவேந்திரன் இல்லாததால் அவரது பெற்றோரிடம் சண்டையிட்டார். அப்போது தகாதவார்த்தைகளில் பேசி அவர்களை தாக்க முயன்றதாகவும் தெரிகிறது.

இதனால் ரேவேந்திரனின் தாயார் ரேணுகா, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக திருவொற்றியூர் போலீஸ் நிலைய ஏட்டு சரவணன் அங்கு விசாரணைக்கு சென்றார்.

ரேவேந்திரன் பெற்றோரிடம் தகராறு செய்த செல்வியை தடுக்க முயன்றார். ஆனால் செல்வி தொடர்ந்து தகராறு செய்யவே அதனை தனது செல்போனில் படம் பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த செல்வி, போலீஸ்காரர் சரவணனின் வலது கையை கடித்தார். மேலும் அவரது சட்டையை பிடித்து இழுத்தும் தகராறு செய்தார். இதில் அவரது சட்டை கிழிந்தது.

கைது

இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ருக்மணி சம்பவ இடத்துக்கு சென்று செல்வியை போலீஸ் நிலையம் அழைத்து சென்றார். பின்னர் அவர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், அத்துமீறி உள்ளே நுழைதல், தகாத வார்த்தைகளில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.

போலீஸ்காரர் சரவணன் சட்டையை பிடித்து சல்வி தகராறு செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com