எழும்பூரில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பெண் சாவு உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

சென்னை எழும்பூரில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
எழும்பூரில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பெண் சாவு உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
Published on

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த மையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி சரசு (வயது 45). பல வருடங்கள் ஆகியும் இத்தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. இதையடுத்து சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் சரசு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கர்ப்பப்பையில் நீர் கட்டி இருப்பதாகவும், அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர். அதன்படி நேற்று முன்தினம் இரவு சரசுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் அறுவை சிகிச்சை நடந்து பல மணி நேரங்கள் ஆகியும் சரசுக்கு நினைவு திரும்பவில்லை.

இதையடுத்து சரசு உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் சரசுவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சரசுவுக்கு அறுவை சிகிச்சை நடந்த அந்த கருத்தரிப்பு மையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த எழும்பூர் போலீசார், சரசுவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட கருத்தரிப்பு மையம், நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து சரசுவின் உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com