கல்வராயன்மலையில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது

தினத்தந்தி செய்தி எதிரொலியால் கல்வராயன்மலையில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கல்வராயன்மலையில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது
Published on

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை பஸ் நிலையத்துக்கு மாவட்டத்தின் தலைநகரம் மற்றும் சேலம், தர்மபுரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் வந்து செல்கின்றன. கல்வராயன்மலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெள்ளிமலை பஸ் நிலையத்துக்குதான் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் கல்வராயன்மலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கரியாலூர் முதல் வெள்ளிமலை வரை நெடுஞ்சாலைத்துறை மூலம் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் பலமாதங்கள் ஆகியும் சாலை அமைப்பதற்காக வெறும் ஜல்லிகள் மட்டும் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் தார் ஊற்றப்படவில்லை. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் சறுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களின் டயர்கள் தேய்மானம் ஆவதோடு, பஞ்சர் ஆகி வீண்செலவு ஏற்படுவதாக புலம்பினர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மலைவாழ்மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றிய செய்தி புகைப்படத்துடன் கட்டுரையாக தினத்தந்தியில் நேற்று வெளியானது.

இதன் மூலம் இந்த விவகாரம் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் தேன்மொழி தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை கல்வராயன் மலைக்கு வந்து சாலையை பார்வையிட்டு ஏற்கனவே போடப்பட்டுள்ள ஜல்லி கற்களின் மீது தார் ஊற்றி சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என ஒப்பந்ததாரரை எச்சரித்தனர். இதையடுத்து சாலை அமைக்கும் பணி உடனடியாக தொடங்கியது.

ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு பலமாதங்களாக மந்தமாக நடந்து வந்த சாலைப்பணி நேற்று மீண்டும் தொடங்கியதையடுத்து மகிழ்ச்சி அடைந்த மலைவாழ்மக்கள் இதற்கு காரணமான தினத்தந்திக்கும் நன்றி தொவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com