

சமயபுரம்:
வேலூர் மாவட்டம், கம்பங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராணி(வயது 45). இவரும், இவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் வேலூரில் இருந்து சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக நேற்று காலை சமயபுரத்திற்கு ஒரு காரில் வந்தனர். அங்கு அவர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது புஷ்பராணி கையில் வைத்திருந்த மணிபர்சை தவற விட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் தேடிப் பார்த்தும் பர்ஸ் கிடைக்கவில்லை. பர்சில் ரூ.5,300 மற்றும் ஏ.டி.எம். கார்டு, ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்டவை இருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கார்களில் அம்மன் படம் வரையும் வேலை பார்த்து வரும் மாகாளிகுடியைச் சேர்ந்த அறிவானந்தம் என்பவர், அந்தப் பகுதியில் கீழே கிடந்த மணிபர்சை கண்டெடுத்து போலீஸ் நிலையம் சென்று ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், புஷ்பராணியை போலீஸ் நிலையம் வரவழைத்து பர்சை ஒப்படைத்தார். மேலும் அறிவானந்தத்தை போலீசாரும், பெண் பக்தர் குடும்பத்தினரும் பாராட்டினர்.