தொழிலாளி அடித்துக்கொலை

குடியாத்தம் அருகே தொழிலாளி அடித்துக் கொலைசெய்யப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி அடித்துக்கொலை
Published on

நிர்வாண நிலையில் பிணம்

குடியாத்தம் அடுத்த கள்ளூர் காந்திநகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் மாட்டுத்தீவன பயிர்களுக்கு இடையே நேற்று நிர்வாண நிலையில் ஆண் ஒருவர் முகத்தில் காயங்களுடன், நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் ரகு சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடனடியாக குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் சியாமளா, செந்தில்குமாரி, முகேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், தரணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

தொழிலாளி

தொடர்ந்து சுற்றுப்புற பகுதிகளில் ஆண் யாராவது காணாமல் போயுள்ளார்களா என விசாரணை நடத்தியதில் கள்ளூர் மதுராம்பிகை நகரை சேர்ந்த ஹையாத்பாஷா என்பவரை நேற்றுமுன்தினம் இரவில் இருந்து காணவில்லை என்பது தெரியவந்து. அதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வந்து பார்த்தபோது இறந்து கிடந்தவர் ஹையாத்பாஷா என அடையாளம் தெரியவந்தது.

ஹையாத்பாஷா கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்த போது அவருக்கு போன் வந்துள்ளது. உடனே வெளியே சென்று விட்டு வருவதாக மனைவிடம் கூறிவிட்டு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

இந்த நிலையில் தென்னந்தோப்பில் நிர்வாண நிலையில் காயங்களுடன் பிணமாக கிடந்ததை பார்த்து அவரது குடும்பத்தினர், மனைவி, பிள்ளைகள் கதறி அழுத சம்பவம் காண்போரை கண் கலங்க செய்தது. உடல் கிடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர்தூரத்தில் உள்ள மரத்தில் அவரது உடைகள் தொங்க விடப்பட்டிருந்தது.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து துப்புத்துலக்க வேலூரில் இருந்து மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து கள்ளூர் மருத்துவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹையாத்பாஷாவுக்கு போன் செய்தது யார்?, அவர் எதற்காக இங்கு வந்தார்?, அவரை யார் கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com