உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!
Published on

நாகை,

கீழ்த்திசை நாடுகளின் லூர்துநகரம் என அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கும்.

இந்நிலையில், இந்தாண்டு பெருவிழா இன்று மாலை மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் கொடி புனிதம் செய்யப்பட்டு ஊர்வலத்துக்கு பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கொடியேற்றத்தை காண தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் குவிந்தனர்.

வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், ஆலயம் மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலி நடக்கிறது. வரும் 1-ம் தேதி மாலை சிலுவை பாதையும், 7-ம் தேதி மாலை தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபமும் நடைபெறும் அதை தொடர்ந்து சிறப்பு பாடல் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

8-ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. காலை 8 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி நடக்கிறது. இதன்பின்பு கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதைபோல சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றி வைத்தார். கொடியேற்றத்தை காண, சாலைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com