கோவிலை சூறையாடிய வாலிபர்

கோவிலை வாலிபர் சூறையாடினார்.
கோவிலை சூறையாடிய வாலிபர்
Published on

அடித்து உடைத்தார்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் கிராம மக்களால் சமீபத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலுக்கு தேர் செய்யும் பணிக்காக பொருட்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் வாங்கி, அதனை பெயிண்டு அடித்து வைத்திருந்தனர். அதேபோல் சாமியை ஊர்வலமாக கொண்டு செல்லும் சகடையும் இருந்தது. கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை கோவில் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே சென்ற ஒரு வாலிபர், சகடை மற்றும் தேர் கட்டுவதற்காக வைத்திருந்த விலை உயர்ந்த மரங்கள் ஆகியவற்றையும், சாமிக்கு பயன்படுத்தும் சேலைகளையும் தீ வைத்து கொளுத்தியுள்ளார். பின்னர் கோவில் சுவற்றில் இருந்த கேமராக்களை அடித்து உடைத்ததோடு, மின்சாதன பொருளையும் அடித்து உடைத்தார்.

போலீசார் விசாரணை

இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் சுற்றுச்சுவரை ஏறி குதித்து அருகில் இருந்த டாஸ்மாக் கடை பகுதிக்கு தப்பி ஓடினார். ஆனால் விரட்டிச்சென்ற கிராம மக்கள், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் கஞ்சா மற்றும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இது பற்றி செந்துறை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி, அந்த வாலிபரை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த வாலிபர் கஞ்சா மற்றும் குடிபோதையில் இந்த செயலை செய்தாரா? அல்லது மனநிலை பாதிக்கப்பட்டு இந்த செயலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவிலை வாலிபர் சூறையாடிய சம்பவத்தை அறிந்து கிராம மக்கள் அங்கு திரண்டு வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com