கீரம்பூர் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகை திருட்டு

கீரம்பூர் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகை திருட்டு
கீரம்பூர் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகை திருட்டு
Published on

பரமத்திவேலூர்:

பரமத்தி போலீஸ் எல்லைக்குட்பட்ட கீரம்பூர் ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே உள்ள புலவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி பாப்பாயி (வயது 65). ராமசாமி இறந்து விட்டார். இவர்களது மகன் ரவி நாமக்கல்லில் இருப்பதால் பாப்பாயி மட்டும் புலவர்பாளையம் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பாப்பாயி வீட்டுக்கு காரில் வந்த பெண் ஒருவர் அவரிடம் தண்ணீர் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது அருகில் உள்ள கோவிலில் பொங்கல் வைத்து அன்னதானம் செய்வதற்காக வந்துள்ளதாகவும், அதற்காக வாழை இலை தேவைப்படுவதாகவும் கூறி இலையை கேட்டு பெற்றார். இதனை தொடர்ந்து மூதாட்டியின் மகன் மற்றும் பேரன்கள் நலமாக இருக்க வீட்டில் மாந்திரிக பூஜை செய்ய வேண்டும் என கூறினார். அதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவிக்கவே கட்டாயப்படுத்தி பூஜை நடத்தியதாக தெரிகிறது.

அப்போது வீட்டில் உள்ள நகைகளை பூஜையில் வைக்க வேண்டும் என கூறியதையடுத்து மூதாட்டி தனது 4 பவுன் தங்க சங்கிலியை பூஜையில் வைத்தார். பின்னர் பூஜை முடிந்ததும் எலுமிச்சம்பழங்களை வீட்டின் 4 பகுதிகளிலும் போட்டுவிட்டு வருமாறு பாப்பாயிடம் கூறினார். இதனையடுத்து அவர் எலுமிச்சம் பழத்தை போடுவதற்காக வெளியே சென்ற சமயத்தில் பெண் காரில் ஏறி தப்பி முயல்வதை மூதாட்டி பார்த்து கூச்சலிட்டார். அதற்குள் அந்த பெண் காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் பாப்பாயி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் தங்க நகையை திருடி சென்ற பெண் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com