

தேனி,
தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச்சென்றார். அந்த சிறுமி ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பின்னர் அந்த சிறுமியை செல்வம் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரக்சிதா ஆஜராகி வாதாடினார்.
வழக்கு விசாரணை முடிவில், செல்வத்துக்கு போக்சோ சட்டப்பிரிவு 6-ன் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், கடத்திய குற்றத்துக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 366-ன் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து செல்வத்தை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச்சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.