

தேனி,
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கேரள பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் கொடைக்கானல் சுற்றுலாவை முடித்துவிட்டு ஊர்திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களின் பேருந்து திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் புல்லக்காபட்டி அருகே சென்றபோது பேருந்தின் டயர் திடீரென வெடித்து பேருந்தில் தீப்பற்றியது.
இந்நிலையில், உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்தி 40-க்கும் மேற்பட்ட மாணவர்களை பத்திரமாக கீழே இறக்கினார். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
டயர் வெடித்ததைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த ஏ.சி. சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவர்கள் ஊர் திரும்ப மாற்று பேருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.