

தேனி,
தேனி மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.20,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்துள்ளனர்.
தேனி மாவாட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி காளிராஜ். இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக உள்ளூர் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது, அங்கு வி.ஏ.ஓ-வாகப் பணியாற்றி வந்த வித்யா (வயது 32), பட்டா மாறுதல் செய்து தருவதற்கு கைமாறாக ரூ.20,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ், இதுகுறித்து தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை காளிராஜ் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வி.ஏ.ஓ வித்யாவிடம் கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது வி.ஏ.ஓ வித்யா, அந்த பணத்தை அங்கு நின்றிருந்த இடைத்தரகர் மருது என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இடைத்தரகர் மருது பணத்தைப் பெற்றுக் கொண்டு வி.ஏ.ஓ வித்யாவிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களின் கைகளில் வேதிப்பொருள் சோதனை செய்யப்பட்டதில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பெண் வி.ஏ.ஓ வித்யா மற்றும் இடைத்தரகர் மருது ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.