

தேனி,
தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நீர்மட்டம் 26 அடி யாக சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தேவதானப்பட்டி அருகே 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 258 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சிகள், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பழைய வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் அக்டோபர் 15-ந்தேதி முதல் போக பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணை நிரம்பவில்லை. இதனால் முதல் போக பாசனத்துக்கு அணை திறக்கப்படாததால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, குடிநீர் தேவைக்காக கடந்த ஆண்டு 3 முறை அணையில் இருந்து வினாடிக்கு 10 கனஅடி வீதம் 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் கிணறுகள் மற்றும் ஆற்றங்கரையோர விவசாய கிணறுகளில் ஓரளவு நீர்ஊற்று கிடைத்தது.
இந்தநிலையில், கடந்த 5 மாதங்களாக மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்புபகுதிகள் மற்றும் தேவதானப்பட்டி சுற்றுவட்டாரத்தில் மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. அணையின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து தற்போது 26 அடியாக உள்ளது.
தற்போது அணைக்கு நீர்வரத்து இல்லாததால், ஆற்றங்கரையோர குடிநீர் கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் சுற்றுவட்டார பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், வருகிற முதல் போக பாசனத்துக்கும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. அணை திறக்க இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், அதற்குள் பலத்த மழை பெய்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும். இதனால் பாசனத்தை எதிர்பார்த்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.