

தேனி அருகே டொம்புச்சேரி கிராமத்தை சேர்ந்த முத்து (வயது 58), கூலித்தொழிலாளி. அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருந்தனர். இதில் 2-வது மகள் பாப்பாத்திக்கும் (வயது 30), சிவகாசி அருகே நாராயணபுரத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு அருணா(8), சங்கீதா(5) என 2 குழந்தைகள் இருந்தனர். பாப்பாத்திக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் சார்ந்த பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் டொம்புச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். 2 மகள்களும் அவருடன் வசித்தனர்.
இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி காலை பாப்பாத்தி தனது 2 மகள்களை அழைத்துக் கொண்டு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
தனது மகள், பேத்திகளை காணவில்லை என்று பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் முத்து புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று மாலை, டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே மதுரைவீரன் கோவில் அருகில் உள்ள ஒரு கிணற்றில் 3 பேரின் உடல்கள் பிணமாக மிதந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றில் மிதந்த 3 உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பிணமாக மிதந்தது பாப்பாத்தி மற்றும் அவருடைய மகள்கள் அருணா, சங்கீதா என்று தெரியவந்தது. மேலும் விசாரணையில், 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, பாப்பாத்தி தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.