

தேனி,
தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களிலும், புண்ணிய ஸ்தலங்களிலும் ஒன்றாக விளங்கும் சுருளி அருவி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக இந்த அருவியில் நீர்வரத்து இல்லாமல், வெறும் பாறைகளாக காட்சியளித்து வந்தது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குறிப்பாக தமிழ் புத்தாண்டு தினத்திலும் நீர்வரத்து இல்லாததால், ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் நீராட முடியாமல், முல்லைப்பெரியாற்றில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து சென்றனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு சுருளி மற்றும் ஹைவேவிஸ் மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன்காரணமாக சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, நேற்று காலை முதல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியுள்ளது.
இதையடுத்து வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கினர். நீண்ட நாட்களுக்கு பிறகு அருவியில் தண்ணீர் கொட்டியதால், குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ஆனந்த குளியல் போட்டனர். தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடும் வெயிலும் அனல் காற்றும் வீசி வரும் நிலையில், சுருளி அருவியில் அதிகரித்துள்ள நீர்வரத்து சுற்றுலா பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு வருகை தந்து இயற்கை அழகை ரசித்து சென்றனர்.