தென்காசி: முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

தென்காசியில் முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை விவகாரத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மற்றும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
தென்காசியில் சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உணவு ஒவ்வாமையால் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்களில் 3 பேர் பெண்கள். ஒருவர் ஆண் ஆவார்.
இந்த விவகாரத்தில், முதியோர் காப்பக நிர்வாகி ராஜேந்திரன், சாம்பவர்வடகரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் கடந்த 17-ந்தேதி பலியானார். இதனால், முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை விவகாரத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்தது. இந்த சூழலில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் மற்றும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.






