

சென்னை,
கல்வித்துறை சார்பில் வகுப்பறை செயல்பாடுகள் உடனுக்குடன் தெரியும் வகையில் வகுப்பறை நோக்கின் என்ற செயலி தொடங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், செயலாளர் தீரஜ்குமார், சமக்ரா சிக்ஷா மாநில திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் வளர்மதி, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்பட கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும், அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் சுமுகமாக நடந்து வருகிறது. கொரோனா நிலைமை சீரானபிறகு, ஒவ்வொரு மாநிலமும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு, முதல்-அமைச்சர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெறும். அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு, அதன் பிறகுதான் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்.
ஆன்-லைன் வகுப்புகளுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை வரவழைத்து அங்கிருந்தபடி, ஆன்-லைன் வகுப்புகள் எடுக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுத்தேர்வு எழுத செல்லும் மாணவர்களின் உடல்வெப்பத்தை சரிபார்க்க 15 ஆயிரம் மெஷின்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன. பரிசோதித்துதான் அவர்களை தேர்வு எழுத வகுப்பறைக்கு அனுப்புவோம். மாணவர்களுக்கு முககவசமும் வழங்கப்படும். மருத்துவமனையில் யாராவது மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் அதுகுறித்து அரசு முடிவு எடுக்கும்.
பாடத்திட்டம் குறைப்பது...
பாடத்திட்டம் குறைப்பது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு ஆய்வுசெய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, ஆன்-லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். பின்னர் அதை திருத்திக்கொள்ள அவரே கூறினார்.