'சுடுகாட்டை காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

நன்னிலம் பகுதிகளில் சுடுகாட்டை காணவில்லை, அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
'சுடுகாட்டை காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
Published on

பொது சுடுகாடு

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த உபயவேதாந்தபுரம் ஊராட்சியில் உள்ள உபயவேதாந்தபுரம், பொன்னரை, ஒன்பத்துவேலி, கருணகொல்லை, சாமந்தாகுளம் ஆகிய 5 ஊர்களுக்கு உபய வேதாந்தபுரம் பகுதியில் பொது சுடுகாடு ஒன்று உள்ளது.

இந்த சுடுகாட்டினை கடந்த பல வருடங்களாக அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சுடுகாட்டில் 25 அடி ஆழத்திற்கு தோண்டி மண் எடுத்துள்ளதாகவும், இதனால் மழை காலங்களில் அந்த இடத்தில் குளம் போல் தண்ணீர் தேங்குவதாகவும், மேலும் மண்சரிவு ஏற்பட்டு சுடுகாட்டிற்கு பாதை இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்து உள்ளனர்.ஆனாலும் இந்த மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று 5 ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

இந்த நிலையில் நன்னிலம், சன்னாநல்லூர், பேரளம், பூந்தோட்டம், மேனாங்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் முக்கிய பகுதிகளில் 'சுடுகாட்டை காணவில்லை' என்று உபயவேதாந்தபுரம் ஊராட்சி மற்றும் ஐந்து ஊர் கிராம பொதுமக்கள் என்று அச்சிடப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் தங்களது சுடுகாட்டை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து 25 அடி ஆழத்திற்கு குழி தோண்டி உள்ளதை கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும் வருகிற 10-ந் தேதி(திங்கட்கிழமை) பேரளம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தாசில்தார் விளக்கம்

இதுகுறித்து நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன் கூறுகையில், தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டேன். இதுகுறித்து புவியியல் மற்றும் கனிமவியல் சுரங்கத் துறைக்கு அறிக்கை அனுப்பி உள்ளேன். இன்று(வியாழக்கிழமை) கிராம மக்களை அழைத்து அவர்களிடம் நன்னிலத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com