தமிழக சட்டசபையில் பரபரப்பு...! கவர்னர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. கவர்னர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் பரபரப்பு...! கவர்னர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
Published on

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் என்ற வார்த்தையை பேசாமல் தவிர்த்தார். ஆளுநர் உரையின் ஒரு பக்கத்தில் 'வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்' என்ற வாக்கியம் இடம்பெறிருந்த நிலையில், உரையாற்றும்போது அதனை பேசாமல் தவிர்த்துள்ளார். 2 மற்றும் 3 பக்கத்தில் இருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும் பேசாமல் தவிர்த்தார்.

இதேபோல் 46ம் பக்கத்தில் இருந்த 'சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது' என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்துள்ளார். இது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநர் உரையைத் தொடர்ந்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிப்பதாகவும், அவர் பேசியது அரசின் கொள்கைக்கு மாறானது என்றும் கூறினார்.

மேலும், அரசு தயாரித்து கொடுத்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது விதியை மீறிய செயல் ஆகும். எனவே, இன்று அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் பேரவை தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக்குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அதேபோல் அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தையும் முன்மொழிந்தார். இந்த தீர்மானங்களை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்துகொண்டிருந்தபோது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் அவையில் இருக்கும்போது அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது மரபல்ல என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com