

சென்னை,
'நீட்' முறைகேடு தொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து 'நீட்' விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி முதல் முறையாக இது தொடர்பாக கருத்து தெரிவித்தார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: "நமது இளைஞர்களின் நலனையும், அவர்களின் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கும் வகையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.மாணவர்களின் நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது" என்று தெரிவித்தார்
இந்த நிலையில், மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களில் ஒருவர் கூட, சட்டத்தின் பார்வையில் இருந்து தப்ப முடியாது என நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்து விட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகளைத் தடுக்க, அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும், முழுக்க முழுக்க “Computer-Based Test” முறையில் நடக்கும் என நமது மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஆனால், கரப்பான் பூச்சி கூட்டத்துடன் இணைந்து இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலவரமாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது.
எனவே, தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, தேசத்தின் இளைஞர் சக்தியை தவறான வழியில் காங்கிரஸ் கட்சி வழிநடத்தக் கூடாது! இளைஞர்களுக்கான வளமான எதிர்காலத்தை உருவாக்க, அரசியல் நிலைப்பாடுகளை தாண்டி அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.