

சென்னை,
சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா, தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில், வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரமில்லை. வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், போயஸ்தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவில்லமாக பொதுமக்கள் பார்வைக்கு நாளை திறக்கப்பட உள்ளதாக அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நாளை வேதா இல்லம் திறக்கப்படவிருப்பதால் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், அதனை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்
இதையடுத்து, வேதா இல்ல பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தி இருப்பதாகவும் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தின் போது, சமூகத்திற்கு குறிப்பிட்ட பங்களிப்பை வழங்கிய ராஜாஜி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். போன்ற முன்னாள் முதலமைச்சர்களின் இல்லங்கள் நினைவிடமாக மாற்றப்பட்டதைப் போல ஜெயலலிதாவின் இல்லத்தையும் நினைவிடமாக மாற்ற அரசு முடிவு செய்ததாகவும், வீட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து திறக்க எந்த தடையும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதே சமயம் மனுதாரர் முன்னிலையில் வேதா இல்லத்தில் உள்ள பொருட்களை கணக்கீடு செய்யவில்லை என்பதால் பொது மக்களின் பார்வைக்கு நினைவு இல்லத்தை திறந்துவிடக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள் இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.